மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அணையின்
நீர்மட்டமும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 19ம் தேதியன்று வினாடிக்கு 12
ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அது
படிப்படியாக குறைந்து தற்போது, வினாடிக்கு வெறும் மூவாயிரம் கன அடி தண்ணீர்
மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் டெல்டா பாசனத் தேவைக்காக மேட்டூர்
அணையிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால்
அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில்
அணையின் நீர் மட்டம் இரண்டு அடி குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா திட்டவட்டமாகத்
தெரிவித்துவிட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா
சாகுபடியை, வடகிழக்குப் பருவமழைதான் காப்பாற்ற முடியும் என்ற நிலை
உருவாகியுள்ளது.
-பசுமைநாயகன்