நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும் என கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்தார்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற லஞ்ச, ஊழல் மற்றும் மது ஒழிப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழாவில் தொலைபேசி எண்ணை வெளியிட்டு சகாயம் பேசியதாவது:
லஞ்சம் மற்றும் ஊழலை வேண்டுமானால் ஒழித்து விடலாம். ஆனால், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவை ஒழிக்க நாம் அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும்.
மக்கள் லஞ்சம் கொடுக்க முனையாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலமே நாட்டில் லஞ்சம், ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.
ஒரு நெசவாளன், 5.5 மீட்டர் சேலையை நெய்ய 19 ஆயிரம் முறைக்கு மேல் கை, கால்களை அசைக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் ஒரு நெசவாளனின் ஒரு நாள் கூலி ரூ.75 மட்டுமே. ஆனால் அரசு அதிகாரிகளின் சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம். ஆகவே அதிகாரிகள் நெசவாளர்களுக்காக, அவர்களுடைய அவல நிலையை போக்க ஏதேனும் நன்மை செய்ய வேண்டும்.
நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனமான பெப்சியின் குறிப்பிட்ட குளிர்பானம் குடிக்க இயலாததாக உள்ளது என புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவன தொழிற்சாலைக்கு சீல் வைக்க முனைந்தபோது பல விதங்களில் எனக்கு தடைகள் வந்தன. என்னுடைய சட்ட அறிவின் மூலம் பல்வேறு தடைகளை முறியடித்து பெப்சி தொழிற்சாலைக்கு சீல் வைத்தேன்.
அழகுசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பதால் பலர் இறக்கிறார்கள் என தகவல் வந்தது. இதனை ஒழிக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் லஞ்சம், ஊழல். இதனால் என் மீதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை என் சட்ட அறிவின் மூலமே முறியடித்தேன். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களுக்கும் சட்ட அறிவு எவ்வளவு அவசியம் என்பது புரியும். சட்ட அறிவை பொதுமக்களிடம் வளர்க்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும் என்று கூறினார். முன்னதாக சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ பேசியது:
இந்த தொலைபேசி சேவையில், அரசு வழங்கும் சேவைகள் பற்றியும், லஞ்சம் கொடுக்காமல் சேவைகளைப் பெறுவது பற்றியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறித்தும், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 வரை 7 மணி நேரம் செயல்படுகிறது. இது வருங்காலத்தில் 24 மணி நேரமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
-பசுமைநாயகன்