சேலத்தில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் மூன்று சிறுமிகள்
அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதில், இரண்டு பேர் சேலம் அரசு
மருத்துவமனையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இடைப்பாடியைச்
சேர்ந்த 7 வயது சிறுமி ஹரிணி, அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப்
பெற்று வந்த நிலையில், நேற்று மரணமடைந்தார்.
இதேபோன்று, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவர்ஷா என்ற சிறுமியும்
சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீவர்ஷாவின் சகோதரியான ஸ்ரீநிஷாவும்,
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை ஸ்ரீநிஷா உயிரிழந்த நிலையில்,
மாலையில் ஸ்ரீவர்ஷாவும் மரணமடைந்தார். இரட்டைப் பிறவிகளாக இவர்கள் இருவரும்
ஒரே நாளில் உயிரிழந்தது, அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என
பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகளுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதன்படி,
காய்ச்சலால் உயிரிழந்த ஒரு குழந்தையின் அருகிலேயே மற்றொரு குழந்தைக்கு பல
மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பொதுமக்கள்
மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து,
ஏராளமானோர் திரணடு நேற்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்