சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது. தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர். பின்னர், பாட்டி இறந்துவிட தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்