- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் பட்டாசு குடோன் விபத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

         சேலம் அருகே காமனேரியில் நாட்டு வெடிமருந்து தயாரிக்கும் குடோனில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் குடோனின் உரிமையாளர் சாந்தி, சிவகாமி மற்றும் அங்கு பணியாற்றிய வந்த சிறுவர்கள் கேசவன், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தங்கம் என்பவர் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிர் பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காமனேரியை அடுத்த சாத்தப்பாடி என்ற இடத்தில் செயல்பட்டு வந்த இந்த குடோனில், திருவிழாக்களில் வாணவேடிக்கை நடத்துவதற்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம் போல் இன்று பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதில் அந்த குடோன் முழுவதும் இடிந்து சேதமடைந்தது.
3 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டனர்

- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 2 பேர் கைது


   சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது. தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர். பின்னர், பாட்டி இறந்துவிட தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

காவிரி நீர் மேட்டூர் வந்தடைந்தது

          கர்நாடகாவின் கிருஷ்ணாசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், இன்று மேட்டூர் வந்தடைந்தது.
நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நேற்று வந்தது. அப்போது 500 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த நீரின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர், இன்று காலை 11 மணியளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது.தமிழகம் வரும் நீரின் அளவை, பிலிகுண்டுவில் உள்ள நீர் அளவிடும் மையத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் : தேமுதிகவினர் சாலை மறியல்

         சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுகவினர் அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டிய தேமுதிக பெண் சட்டமன்ற உறுப்பினர் உட்பட அக்கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கெங்கவல்லி தேமுதி எம்எல்ஏ சுபாவுக்கு பேச வாய்ப்பு தருவது தொடர்பாக இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் பேசிய பின்னர் எம்எல்ஏ.,வுக்கு பேச வாய்ப்பு தருவது மரபு இல்லை என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதை எதிர்த்து சுபாவும் அவரது ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பினர். அப்போது அவரை அதிமுகவினர் அவதூறாக பேசியதாக கூறி திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்பு, சுபா தலைவாசல் காவல் நிலையத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் தெரிவித்தார். அவரது தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்