லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க ஒன்றுபட வேண்டும்


Pasumai4U Pasumai Nayagan பசுமைநாயகன்

      நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவையும் ஒழிக்க அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும் என கோ-ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் உ.சகாயம் தெரிவித்தார்.
     சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற லஞ்ச, ஊழல் மற்றும் மது ஒழிப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழாவில் தொலைபேசி எண்ணை வெளியிட்டு சகாயம் பேசியதாவது:
     லஞ்சம் மற்றும் ஊழலை வேண்டுமானால் ஒழித்து விடலாம். ஆனால், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர். லஞ்சம், ஊழலுக்கு இணையாக மதுவை ஒழிக்க நாம் அனைவரும் நேர்மையாக ஒன்றுபட்டு போராட வேண்டும்.
மக்கள் லஞ்சம் கொடுக்க முனையாமல் நேர்மையுடன் செயல்படுவதன் மூலமே நாட்டில் லஞ்சம், ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.
     ஒரு நெசவாளன், 5.5 மீட்டர் சேலையை நெய்ய 19 ஆயிரம் முறைக்கு மேல் கை, கால்களை அசைக்க வேண்டும். ஆனால் இந்த நிலையில் ஒரு நெசவாளனின் ஒரு நாள் கூலி ரூ.75 மட்டுமே. ஆனால் அரசு அதிகாரிகளின் சம்பளம் இதை விட பல மடங்கு அதிகம். ஆகவே அதிகாரிகள் நெசவாளர்களுக்காக, அவர்களுடைய அவல நிலையை போக்க ஏதேனும் நன்மை செய்ய வேண்டும்.
    நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனமான பெப்சியின் குறிப்பிட்ட குளிர்பானம் குடிக்க இயலாததாக உள்ளது என புகார் வந்தது.
     இதனைத் தொடர்ந்து அந்த நிறுவன தொழிற்சாலைக்கு சீல் வைக்க முனைந்தபோது பல விதங்களில் எனக்கு தடைகள் வந்தன. என்னுடைய சட்ட அறிவின் மூலம் பல்வேறு தடைகளை முறியடித்து பெப்சி தொழிற்சாலைக்கு சீல் வைத்தேன்.
     அழகுசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பதால் பலர் இறக்கிறார்கள் என தகவல் வந்தது. இதனை ஒழிக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் லஞ்சம், ஊழல். இதனால் என் மீதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை என் சட்ட அறிவின் மூலமே முறியடித்தேன். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களுக்கும் சட்ட அறிவு எவ்வளவு அவசியம் என்பது புரியும். சட்ட அறிவை பொதுமக்களிடம் வளர்க்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும் என்று கூறினார். முன்னதாக சட்ட பஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ பேசியது:
     இந்த தொலைபேசி சேவையில், அரசு வழங்கும் சேவைகள் பற்றியும், லஞ்சம் கொடுக்காமல் சேவைகளைப் பெறுவது பற்றியும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறித்தும், மதுவினால் ஏற்படும் சமூகப் பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த சேவைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 வரை 7 மணி நேரம் செயல்படுகிறது. இது வருங்காலத்தில் 24 மணி நேரமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
-பசுமைநாயகன் 

தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம்Pasumai4U www.thagavalthalam.com


         நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

     தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது. நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.

     கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.


      நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

          நெல்லிக்கனியின் மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சாப்பிடலாம் .
 
            உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

         முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். நானும் அனுபவித்து இருக்கின்றேன் .

       பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லியில் அப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி என்பன நிறைந்துள்ளது

வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

thagavalthalam

      சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையில் வீட்டு சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
பொன்னம்மா பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த இந்த விபத்தில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாசன், அவரது மகள் மற்றும் பேத்தி உயிரிழந்தனர். ஸ்ரீநிவாசனின் மனைவி மற்றும் இரு பேரக்குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
thagaval


சேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 2 சிறுமிகள் மீட்புசேலத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த திண்டுக்கலைச் சேர்ந்த 2 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
  சிறுமிகளைக் கொடுமைப்படுத்திய ஜவுளிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் சேவியர் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
  இதுதொடர்பாக, சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்த ஜவுளிக்கடை உரிமையாளர், குழந்தைகளை துன்புறுத்தியதுடன், ஆரோக்கியமற்ற இடத்தில் தங்க வைத்து, உணவளித்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                        -- இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

சேலம் , தேனியில் புதிய தலைமுறை தமிழன் விருதுகள் பரிந்துரை வாகனம்


 சேலத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரை சேகரிப்பு பயணத்தை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துச்செழியன் துவக்கி வைத்தார்
  இலக்கியம், சமூக சேவை, தொழில், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு புதிய தலைமுறை கடந்த ஆண்டில் இருந்து தமிழன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு விருதுகளுக்கு பல்வேறு மாவட்ட பொதுமக்களும் தங்களுடைய பரிந்துரைகளை ஆர்வமுடன் வழங்கி வருகின்றனர். பரிந்துரைகளை சேகரிக்கும் பொருட்டு இன்று
சேலம் மற்றும் தேனியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. சேலம் வந்த புதிய தலைமுறை வாகனம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தனது சேகரிப்பை துவக்கியது.

  பல்கலைக்கழக மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து சேலத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்ற புதிய தலைமுறை வாகனத்தை வரவேற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பரிந்துரை விண்ணப்பங்களை உற்சாகத்தோடு பூர்த்தி செய்தனர் .
  இதே போல் தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தமிழன் விருதுகளுக்கான பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன.
                                        இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்


சேலத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாயம்


        சேலத்திற்கு மாமனார் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சுரேஷ் காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், பொங்கல் தினத்தன்று காலையில் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படை அமைத்து காணாமல் போன சுரேஷைத் தேடி வருகின்றனர்.
இஸ்ரோவில் 6 ஆண்டுகள் விஞ்ஞானியாக பணியாற்றி விலகிய சுரேஷ், தற்போது பெங்களூரு நகரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பொங்கலுக்கு, சேலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தபோது காணாமல் போனார்.
                - இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

குடிபோதையில் ஆர்.ஐ ரகளை : மக்களுக்கு இடையூறு செய்ததால் கைது


     மது அருந்தி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது நண்பர்கள் இருவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரும் பயணித்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுரங்க துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பார்த்தசாரதி, நண்பர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல் சென்று விட்டு பென்னாகரம் வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையிலேயே காரை நிறுத்திய அவர்கள் மதுவும் அருந்தியுள்ளனர்.அதனால், ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்வதற்காக போலீசார் பார்த்தசாரதியிடம் பேசியதற்கு, போலீசாரையும் அவர் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மூவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
                                  இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்