சேலத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாயம்


        சேலத்திற்கு மாமனார் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றபோது, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சுரேஷ் காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே நரசோதிப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சுரேஷ், பொங்கல் தினத்தன்று காலையில் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
பல மணி நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து, உறவினர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 தனிப்படை அமைத்து காணாமல் போன சுரேஷைத் தேடி வருகின்றனர்.
இஸ்ரோவில் 6 ஆண்டுகள் விஞ்ஞானியாக பணியாற்றி விலகிய சுரேஷ், தற்போது பெங்களூரு நகரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பொங்கலுக்கு, சேலத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தபோது காணாமல் போனார்.
                - இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்

குடிபோதையில் ஆர்.ஐ ரகளை : மக்களுக்கு இடையூறு செய்ததால் கைது


     மது அருந்தி விட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரங்கத்துறை வருவாய் ஆய்வாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரது நண்பர்கள் இருவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பேரும் பயணித்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுரங்க துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பார்த்தசாரதி, நண்பர்களுடன் நேற்று மாலை ஒகேனக்கல் சென்று விட்டு பென்னாகரம் வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
அப்போது, சாலையிலேயே காரை நிறுத்திய அவர்கள் மதுவும் அருந்தியுள்ளனர்.அதனால், ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்வதற்காக போலீசார் பார்த்தசாரதியிடம் பேசியதற்கு, போலீசாரையும் அவர் மிரட்டியுள்ளார். அதனை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மூவரையும் பென்னாகரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
                                  இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்