சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் : முதலமைச்சர் உத்தரவு

       சேலத்தில், ஒருங்கிணைந்த கலை பண்பாட்டு மையம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட அரசு இசை பள்ளி, சவகர் சிறுவர் மன்றம், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் அடங்கிய இந்த மையம் தளவாய்பட்டியில் அமையவுள்ளது. அதில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மண்டல உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர ஊக்கத்தொகை 250 ரூபாயிலிருந்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய 4 இடங்களில் படிக்கும் 691 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவால், அரசிற்கு 15லட்சத்து 48ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.